பி.சி.ஆர் பரிசோதனை திறன் குறித்து ஏப்ரல் மாதத்தில் எங்கள் ஐ.எச்.பி வெளியிட்ட மதிப்பீடுகள் இப்பொழுது பொருந்தாது – நம் தேவை கூடிவிட்டது

சமீபத்தில் பலரும் ஏப்ரல் மாத துவக்கத்தில். IHP-யில் நாங்கள் வெளியிட்ட பி.சி.ஆர் பரிசோதனை திறன் குறித்த மதிப்பீடுகளை பல முறை பார்த்துள்ளனர். இந்த மதிப்பீட்டை தொடர்ந்து புதுபிப்பதற்கு தேவையான ஆதாரம் IHP-க்கு இன்னும் கிடைக்கவில்லை, எனினும் இந்த மதிப்பீடுகளை நீங்கள் உபயோகிப்பவரானால் இது இப்பொழுது செல்லாது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இந்த வெளியீடு.

ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளில் சராசரியாக 6,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என வும், தேசிய பி.சி.ஆர் பரிசோதனை திறன் ஒரு நாளைக்கு 9,000 பரிசோதனைகளாக இருக்க வேண்டும் என்றும் மதிப்பிட்டிருந்தோம். எமது தற்போதைய தேவை அநேகமாக நாள் ஒன்றுக்கு 40 – 50,000 பரிசோதனைகளாக இருக்க வேண்டும்.

இதற்கான காரணங்களில் சில இங்கு தரப்பட்டுள்ளன:

1. கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்களின் தடமறிதல் பணி அதிகரித்துள்ளது
முன்மொழிந்தது போல் பரிசோதித்தல் அதிகரிக்கப்படும் என்றும் அதன் விளைவாக வழமையாக கண்டுபிடிக்கப்படும் புதிய தொற்றாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 5-ற்கு குறைவாக இருக்கும் என்றும், அடுத்து ஒரு திடீர்பெருக்கு நிகழ்ந்தால் 50-ற்கு குறைவான தொற்றாளிகள் உள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம். பரிசோதனை திறன் அதிகரிக்கப்படவில்லை. தற்பொழுது, தினமும் 500-க்கும் கூடுதலான புதிய தொற்றாளிகளை பார்க்கிறோம். தொற்றாளிகளை கண்டறிதல் பி.சி.ஆர் பரிசோதனை திறனை பொருத்துதான் என்பதால் இந்த கணிப்பு உண்மையான தொற்று பரவலைவிட குறைவானதாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் 1,000 புது தொற்றாளிகள் உள்ளனர் என்று எடுத்துக்கொண்டால், தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பு பேணியவர்களின் தடமறிய ஒரு நாளைக்கு 20,000 பரிசோதனைகள் நமது தற்போதைய தேவையாகும்.

2. COVID-19 தொற்று உள்ளவர்களின் சிகிச்சை முகாமைத்துவ தேவை அதிகரித்துள்ளது
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 புதிய தொற்றாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் மருத்துவ முகாமைத்துவத்திற்கு ஒரு நாளைக்கு 125 பரிசோதனைகள் தேவைபடும் என்று மதிப்பிட்டிருந்தோம். தொற்றாளிகளின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 1000-ஆக கூடிவிட்டதால், இந்த தேவை நாள் ஒன்றிற்கு 2,500 பி.சி.ஆர் பரிசோதனைகளாக அதிகரித்துள்ளது.

3. புதிய தொற்று அலைகளை தவிர்க்க வழமையாக மேற்கொள்ள வேண்டிய சமூக பரிசோதனை திறன் என்ன என்பது குறித்த எங்கள் புரிதல் அதிகரித்துள்ளது
ஏப்ரல் மாதத்தில் சீனா மற்றும் பிற ஏழை ஆசிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து, நோய் பெருக்குகளை தவிர்க்க நோயின் அறிகுறிகள் உள்ளவர்களை வழமையாக பரிசோதிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டோம். இப்பொழுது அதைவிட கூடுதலான ஆதாரம் நம்மிடம் உள்ளது. இந்த புது ஆதாரத்தின் அடிப்படையில், நம் விமான நிலையங்களை திறந்து வைத்திருக்கப்போகிறோம் என்றால், நாம் வழமையாக நடத்தும் பரிசோதனை அளவு முன்பைவிட பல மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும். இந்த அதிகரிப்பு WHO-வின் சர்வதேச பரிந்துரை அளவை விடவும் அதிகமாக இருக்க வேண்டும்.[1] மற்ற சில ஆய்வுகளின் அடிப்படையிலும் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகானத்தின் அனுபவத்திலிருந்தும், நாம் தெரிந்துகொண்டது என்னவென்றால், சுவாச நோய் அறிகுறிகள் (சளி மற்றும் இருமல்) மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை பரிசோதிக்க ஒரு நாளைக்கு குறைந்தது 20,000 பரிசோதனைகளாவது தேவை. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகானம் பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களை திறந்து வைத்து, முழு பணி முடக்கத்தை தவிர்த்து, மாதாந்திர சமூக பரவலை ஒற்றை இலக்குகளில் கட்டுப்படுத்திவைத்துள்ளது.

எனது கணிப்பு, நமக்கு தற்போது நாள் ஒன்றிற்கு 40,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் தேவை என்றும், நெடுங்காலத்தில் தேசிய திறன் ஒரு நாளைக்கு 50 – 60,000 பி.சி.ஆர் பரிசோதனைகளாக அதிகரிக்க வேண்டும் என்பது தான். இது தற்போதைய நோய் பெருக்கை நாங்கள் கடந்துவிடுவோம் என்னும் நம்பிக்கையில்.


[1]
கடந்த ஆறு மாதங்களில், WHO பரிசோதித்தல் குறித்து வெவ்வேறு அளவுகளை போதுமானவை என பரிந்துறைத்துள்ளது. இவை ஒவ்வொரு வாரமும் 1,000 நபர்களுக்கு 1 பரிசோதனை செய்ய வேண்டும் என்பது முதல் 30 பரிசோதனைகளுக்கு ஒரு புதிய தொற்று கண்டுபிடிக்கப்படும் என்பது வரை ஆகும். இந்த பரிந்துரையின்படி இலங்கை ஒரு நாளைக்கு 3-15,000 பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டும். இப்பரிந்துரைகளின் அடிப்படை ஆதாரம் போதுமானது அல்ல என்றும் பரிந்துறைக்கப்பட்ட பரிசோதனைத் திறன் இலங்கையில் நோயை முற்றிலும் நீக்கி மீண்டும் வராமல் தவிர்க்க போதாது என்பதும் எங்கள் கணிப்பு. நம் ஜனாதிபதி விரும்புவதுபோல் அனைத்துப் பணி முடக்கங்களை தவிர்க்க வேண்டுமென்றால் இலங்கையில் நோயை முற்றிலும் நீக்கி மீண்டும் வராமல் தவிர்ப்பது எங்கள் குறிகோளாக இருக்க வேண்டும்.

* IHP-இன் இந்த COVID-19 பகுப்பாய்வு பணிக்கு யாரிடமும் நிதிஉதவி பெறவில்லை. மேலும் நிதி வழங்குபவர்களுக்கு ஏற்றவாறு எங்கள் பரிந்துரைகளை நாங்கள் மாற்றுவதுமில்லை. எங்கள் குழு இப்பணியை, எவ்வித நிதி கொடுப்பனவும் இன்றி நாட்டிற்கு பக்கசார்பற்ற, ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு ஒன்றை வழங்க ஒரு சேவையாக செய்கின்றனர். எங்களுக்கு உதவ விரும்பினால் அல்லது ஆதரவு அளிக்க விரும்பினால் raviofficelk@gmail.com இல் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

புதுப்பிப்பு:
2020/11/09: திருத்தங்கள் மற்றும் பரிசோதனை அளவு குறித்த WHO பரிந்துரைகளுடன் புதுபிக்கபட்டது.