நாம் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் – பணி முடக்கம் தோல்வியுற்றது, எமக்கு புதிய சிந்தனை தேவை

கடந்த இரண்டு வாரங்களில் கண்டறியப்பட்ட புதிய தொற்றுகள் குறித்து எங்களுக்குத் தெரிந்த விவரங்களை வைத்துப் பார்த்தால் திங்களன்று (ஏப்ரல் 27) கொழும்பில் ஊரடங்கு உத்தரவை நீக்குவது உட்பட, COVID கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை தளர்த்துவதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது. இது மிகப்பாரிய மற்றும் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய கொள்கை தோல்வி மட்டுமன்றி மிக மோசமான தவறாகும். பொறுப்புக்கூறல் என்பதற்கு இந்த நாட்டில் அர்த்தம் ஏதேனும் இருந்தால், தற்போதைய சுகாதார செயற்பாடுகளை வடிவமைப்பதில் பங்குகொண்டவர்களுக்கு எதிராக விளைவுகள் இருந்திருக்கும். தெளிவுபடுத்திக்கூறுவதாயின், நான் இங்கு ஜனாதிபதியை குறிப்பிடவில்லை ஏனெனில் இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையின் மீது நம்பிக்கை வைத்தே செயல்பட்டுள்ளார்.

மார்ச் 20 ம் தேதி மாலை இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் விதித்தபோது, ​​72 COVID தொற்றுகள் மட்டுமே இருந்தன. அதுவரை பெரும்பாலானோர் வெளிநாட்டிலேயே நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் அனைவரும் மார்ச் 19 அன்று வெளிநாட்டு வருகைகள் நிறுத்தப்பட்டதற்கு முன்பு நாடு திரும்பியவர்கள். உள்ளூர் தொற்று பரவல் என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எம் நாட்டின் வருகை அல்லது வெளிநாட்டு சுற்றுலா பிரயாணி மூலமாக ஒரு டஜன் தொற்றுகள் மட்டுமே இருந்தன.

ஊரடங்கு உத்தரவு மூன்று தெளிவான நோக்கங்களைக் கொண்டிருந்திருக்க வேண்டும்:

(1) வைரசை வெளிநாட்டு வருகைகளோடு நிறுத்தி வைத்திருத்தல் – வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, வருகைகள் அனைத்தையும் COVID தொற்றின்  பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று உடையவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள்,மேலும் தொற்று உடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட வேறு நபர்கள், என அதிவேகமாக அனைவரின் தடம் அறிந்து சுயமாக தனிமைப்படுத்துதலை செய்திருக்க வேண்டும்.

(2) சமூகத்தில் மறைந்திருக்கும் நோய்த்தொற்றினை உடனடியாக கண்டறிந்து, தடமறிந்து மற்றும் தனிமைப்படுத்துவதற்கான ஆற்றலையும் முறைமயையும் ஸ்தாபித்தல்.

(3) முதல் இரண்டு நோக்கங்களை அடையும்வரை நாட்டின் ஜனத்தொகையில் பதுங்கியிருக்கக்கூடிய எந்தவொரு வைரஸும் சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் பரவுவதை தாமதிக்கும் வகையில் சமூக தொடர்புகளை குறைப்பது.

ஏப்ரல் 17-உடன் பணி முடக்கம் நான்கு வாரங்களை கடந்துவிட்டது. அதைத் தொடர்ந்த பத்து நாட்களில் 220 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. கீழேயுள்ள வரைபடத்தில் வித்தியாசமான சிவப்பு சாயங்களில் வைரஸின் உள்ளூர் பரவலைக் காட்டுகிறது.

தொற்றுநோய் பரவல் வகையினம் படி இலங்கையில் COVID தொற்றுகளின் வளைவு, 17 ஜனவரி -24 ஏப்ரல் 2020

இதன் அர்த்தத்தை நான் இங்கு தெளிவுபடுத்துகிறேன்.

ஒன்று, வைரசை வெளிநாட்டு வருகைகள் மற்றும் அவர்களின் உடனடி தொடர்புகளின் இடையே மட்டும் கட்டுப்படுத்திவைக்கத் தவறிவிட்டோம். பிற நாடுகள் இதை நான்கு வாரங்களில் செய்தனர். நாங்கள் செய்யவில்லை.

இரண்டு, புதிய தொற்றுகளை விரைவாகக் கண்டறிதல், தடம் அறிதல் மற்றும் தனிமைப்படுத்துதலுக்கு அவசியமான ஆற்றலை நாங்கள் நிறுவத் தவறிவிட்டோம் – எங்களிடம் போதுமான பரிசோதனை திறன் இருப்பதாக அதிகாரிகள் பலமுறை கூறினாலும், நாட்டில் உள்ள ஆய்வக வல்லுநர்கள் அவசரமாக அவர்கள் திறனை விரிவுபடுத்த என்ன செய்ய முடியும் என்று தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில வாரங்களில், நமக்குத் தேவையான பெரிய பரிசோதனை இயந்திரங்களைப் பெறுவதற்கான பல வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த பட்சமாக, ஒரு நாளில் சராசரியாக 5,000–6,000 பரிசோதனைகளைச் செய்யும் திறன் எங்களுக்குத் தேவை. மேலும் முல்லேரியாவாவில் ஒரு புதிய பரிசோதனை நிலையத்தை நிறைவு செய்தாலும், தட்டுப்பாடு இருக்கும். வரவிருக்கும் மாதங்களில் இந்த நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான பரிசோதனைக் கொள்கை ஒன்று எங்களிடம் இல்லை – அனைத்து தீவிர சிகிச்சை பிரிவு சேர்க்கைகளை கட்டாயமாக பரிசோதிக்கவேண்டும் என்ற எளிய நடவடிக்கையைக்கூட எடுக்கவில்லை.

மூன்று, தொற்றுநோய் பரவல் ஏற்படாமல் இருக்க வைரஸ் ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு பரவும் வீதத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தத் தவறிவிட்டோம். முற்றிலும் வேறுபட்ட கொழும்பு மற்றும் வெலிசரா கடற்படை முகாம் போன்ற இடங்களில் ஏற்பட்ட ஒன்று அல்லது இரண்டு தொற்றுகள் அசுர வேகத்தில் பெரும் சம்பவங்களாக மாறிவிட்டன. சமூக விலகல் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்காமல் மற்றும் அடிப்படை சுகாதார நடவடிக்கையாக பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்காமல் ஊரடங்கு உத்தரவை இச்சமயம் விலக்கினால் சமூகத்தில் உள்ள கண்டுபிடிக்கப்படாத தொற்றுடையவர்களிடமிருந்து வைரஸ் மற்றவர்க்கும் அதிவேகமாகப் பரவும் அபாயத்திற்கு உள்ளாவோம்.

முடக்கத்தை குறைந்தபட்சம் மேலும் இரண்டு வாரங்களுக்காவது நாங்கள் வைத்திருக்க வேண்டும். சிலவேளை அதற்கு மேலும் வைத்திருக்க வேண்டியிருக்கலாம். இது, அறியப்பட்ட தொற்று உடையவர்கள் அனைவரின் தொடர்புகளையும் நாங்கள் தனிமைப்படுத்தியுள்ளோம் என்ற நம்பிக்கை வரும் வரையும், மற்றும் முடக்கல் அகற்றப்பட்டால் அறியப்படாத நோய்பெருக்கு ஏற்படாது என்ற நம்பிக்கை வரும் வரையும் தொடரும். முடக்கல் இல்லாத நிலையில் சடுதியான நோய்பெருக்கை தவிர்ப்பதற்கு பாரிய தொகையிலான பரிசோதனை திறனை அடையக்கூடிய செயல் திட்டத்தை உருவாக்கவும் மேலும் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க சமூக விலகல் மற்றும் பொது சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் தேவைப்படும்.

நாம் இப்பொழுதும் இவை அனைத்தையும் செய்ய முடியும். இது நடைபெறாது என்பதே எனது கவலை.

கடந்த மாத முடக்கலை நாங்கள் வீணடித்தோம் என்பது கசப்பான உண்மை. நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இது பணப் பற்றாக்குறையினால் அல்லது ஜனாதிபதி, இராணுவம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக வல்லுநர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்டதைச் செய்ய விரும்பாத காரணத்தினாலோ அல்லது பொதுமக்கள் தியாகங்களைச் செய்யத் தயாராக இல்லாததாலோ நடக்கவில்லை.

இந்நெருக்கடி காலத்தின் தேவைக்கு ஒப்ப செயற்பட முடியாத, சவாலை முழுமையாக புரிந்து கொள்ள இயலாத, வழமையிலிருந்து மீறி புதிதாக சிந்திக்க தெரியாத சிந்தனைப் பார்வைதான் இந்த தோல்வியின் ஆணிவேர் என்னும் முடிவை எடுக்காமலிருக்க இயலாது.

இந்த சிந்தனை பாங்கே தொடரப்போகிறது என நான் பயப்படுகின்றேன், நாம் அனைவரும் பயப்பட வேண்டும். வரும் வருடத்தில், COVID தொடர்ந்து புதிய சிக்கல்களின் மூலம் நம்மை தொடர்ந்து சோதிக்கப் போகிறது. அவற்றில் பல நாங்கள் இதுவரை எங்கள் அனுபவத்தில் காணாதவையாக இருக்கும். நீண்ட போரின் தொடக்கத்தில் இருக்கிறோம். அந்த சிந்தனை பாங்கை மாற்ற முடியாவிட்டால், சுகாதார நடவடிக்கைக்கு புதிய திசை குறித்து சிந்திக்கவோ அல்லது நாம் எதிர்கொள்வது என்ன, அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என முழுமையாகப் புரிந்தவர்களிடமிருந்து சார்பற்ற புதிய வழிகாட்டுதலை அரசு பெறுவது புத்திசாலித்தனமாக இருக்கும்.